//நல்ல நல்ல விசயங்களை தேவையில்லாத எடுத்துக்காட்டுகளால் வீணடிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களுக்கு சினிமாவை மட்டும் உதாரணமாக எடுக்க வேண்டாம்.
டைரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். அவருக்குத் தேவை துட்டு. நடிகர் சொன்னதை நடித்தார், தேவை துட்டு. நடிகை சொன்னதைக் காட்டினார், தேவை துட்டு. அவ்வளவுதான். அவர்கள் யாரும் ஆணாதிக்கம் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், அந்த நடிகையான பெண் கூட கவலைப்படவில்லை.//
டயரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். இப்போது இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.
1. கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையாக இருக்கலாம்.
2. அதை பார்க்க வரும் மக்களுக்கு தேவையாக இருக்கலாம்.
கதையில் கதாபாத்திரத்திற்கு தேவையானதென்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த கதாபாத்திரம் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் ஒரு கோழை தான் பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். எனவே ஒரு கதாபாத்திரம் திரையில் ஆணாதிக்க சிந்தனையோடு படைக்கப்படுமானால் அதில் இவ்வாறான ஆணாதிக்க வசனங்களை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் சொல்லுங்கள் பாபாவோ சிவகாசியோ படையப்பாவோ ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒருவனின் கதையா? இல்லையே. அது முழுக்க முழுக்க மாஸ் ஹீரோ அப்பீலோடு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். அப்படியிருக்கும் போது ஆணாதிக்க சிந்தனை என்பது எதற்காக ஓரிரு காட்சிகளில் தெளிக்கப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு சம்மந்தம் இல்லை எனும் போதும் தொடர்ந்து டயரக்டர் ஒன்றிரண்டு காட்சிகளில் ஆணாதிக்கத்தை போதிக்க காரணம் என்ன?
அதற்கு காரணம் 2. அதாவது அதை பார்க்க வரும் மக்களுக்கு அது தேவைப்படுகிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். பிறகு ரஜினி பிறகு விஜய் என மாஸ் அப்பீல் ஹீரோக்களை நோக்க மக்கள் அலை மோத காரணம் என்ன? சினிமா கொட்டகையில் நாம் கலையை தேடி போவதை விட போதையை தேடி போகிறோம். சமுதாயத்தில் நம்மால் எதிர்த்து கேட்க முடியாத விஷயங்களை அல்லது சமுதாயத்தில் நமக்கு இழைக்கப்படும் தீமைகளை திரையில் ஹீரோ எதிர்த்து போராடுகிற போது நாம் அதை ஒரு போதையோடு ரசிக்கிறோம். உடம்பில் ஜிவ்வென்று ஒரு சக்தி ஏறுகிறது.
உடனே அந்த ஹீரோவை வணங்கி அவருக்கு அரசியல் பிரவேசம் வரை நாம் தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படித்தான் இந்த ஆணாதிக்க சிந்தனையும் சில பல ஆண்களை திருப்த்தி படுத்த திரையில் ஹீரோவின் வாயிலிருந்து கக்கப்படுகிறது. யாரை திருப்தி படுத்த என்று நான் திரும்பவும் விளக்கவேண்டுமா என்ன?

குடும்ப பொண்ணு அப்படின்னா என்னங்க....ஒரு பொண்ணுக்கு குடும்பம் தாண்டி எந்த அடயாளமும் இல்லையா? ஐ.எ.எஸ். ஆபீசரா இருந்தாலும் குடும்ப பொண்ணு தான் வேணுங் குறீங்களே....குடும்ப பொண்ணுன்னா என்ன? இதோ துப்பாக்கி காட்டிட்டு நிக்கிறாங்களே இவங்க குடும்ப பொண்ணா? இல்லேன்னு சொல்லாதீங்க சுட்டுடுவாங்க.
//மேற்கத்திய கலாச்சாரமும் நமதும் ஒன்றா? உடனே அங்கே இப்படியெல்லாம் சொல்வதில்லை என்று சொல்கிறீர்களே! அங்கே அம்மணமாக போராட்டமே நடத்துவார்கள்.
பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் சினிமாவில் காட்டுவதெல்லாம் மக்கள் மனநிலைக்கு சொறிதலே, கல்லா கட்ட ஒரு வழி. சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம் பற்றி சொன்ன நீங்கள், அதில் பணம் வாங்கிக்கொண்டு ஆதரிக்கும் பெண்களைப் பற்றி சொல்லாதது ஏன்?
சென்ற ஒரு பதிவிலேயே கண்டேன். ஆணாதிக்கம் பற்றி சொல்லும் நீங்கள் அதற்குத் துணை போகும் பெண்கலைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்ல மறுக்கிறீர்களா, மறைக்கிறீர்களா அல்லது அது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. வரதட்சணை பற்றிப் பேசும்போது, அதைக் கேட்கும் பெண்கள் பற்றி பேசுவதில்லை. இந்தப் பதிவில் அதில் நடிக்கும் பெண்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக உங்களுடைய ஒரே நோக்கம் ஆண்களைக் குறைசொல்வதுதானா?
இது என்ன பெண்ணாதிக்கமா? இல்லை இப்படி நான் கேட்பதுதான் ஆணாதிக்கமா? அருமையாக பெண்ணடிமை, ஆணாதிக்கம் பற்றிக் கூற நினைக்கிறீர்கள். ஆண்கள் மட்டுமே காரணம் என்பதுபோலதான் உங்கள் பதிவுகள் இருக்கின்றன. ஆண் மற்றும் பெண் இருவரும் எப்படி இந்த ஆணாதிக்கத்தை வளர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்ற கோணத்தில் எழுதிப்பாருங்கள். இதை விட அது மேலோங்கியிருக்கும் என்பது எனது எண்ணம்.//
நீங்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். சபாஷ். உங்களுடைய கேள்வி ஆணாதிக்க சிந்தனையை ஆதரிக்கும் காட்சியில் நடிப்பவள் ஒரு பெண். அவள் அந்த காட்சியில் ஏன் நடிக்க வேண்டும்? அதற்கான உங்களின் பதில் துட்டு.
ஆம் துட்டு. பணத்திற்காக பெண்ணே ஆணாதிக்க சிந்தனையை பேணி வளர்க்கும் அந்த காட்சியில் துட்டுக்காக நடிக்கிறாள் அதை நான் ஏன் குறை கூறவில்லை என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தோழரே அந்த துட்டை அவர்களுக்கு அளிப்பது யார்?
கவுண்டரில் ஐம்பதும் நூறும் பிளாக்கில் இருநூறும் ஐநூறும் கொடுத்து டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்து அவர்களுக்கு பணம் பெற்று தருவது யார்? ரசிகர்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ...எது விற்பனை ஆகிறதோ அதை விற்கத்தான் எந்த சினிமா வியாபாரியும் பிரியப்படுவான். என்வே ஆணாதிக்க சிந்தனைகள் நன்றாக விற்கிறது. காரணம் நம்மில் உள்ள சில மன நோயாளிகளுக்கு விஜய்யோ ரஜினியோ அந்நியாயத்தை எதிர்க்கிற போது கிடைக்கும் போதை ஆணாதிக்கத்தை போதிக்கிற போதும் கிடைக்கிறது. காரணம் அந்த ரசிகனுக்கு அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் பிடிக்கவில்லை. பெண் தான் விரும்புவதை அணிவது பிடிக்கவில்லை. பெண் உடற்பயிற்சி செய்வது பிடிக்கவில்லை. அதை கேள்வி கேட்க அவனால் முடியாத காரணத்தால் திரையில் அவன் விரும்பும் ஹீரோ அந்த ஆணாதிக்க சிந்தனையை பிரகடனப்படுத்தும் போது அவனுக்கு ஒரு போதை கிடைக்கிறது.
அந்த போதைக்கு அவன் துட்டு கொடுக்கிறான். அந்த துட்டுக்காக அவர்கள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். ரசிகர்களும் சமுதாயமும் இது போன்ற ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் திரைப்படங்களை வெறுத்துஒதுக்க ஆரம்பிக்கும் போது இனியும் ஆணாதிக்கத்தை பேணி கல்லா கட்ட முடியாது எனும் நிலை வரும்போது அவர்களாகவே அதை நிறுத்திவுடுவார்கள். எனவே திரையில் தோன்றும் நடிகைகள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளில் நடிப்பது துட்டுக்காக எனும் போது அந்த துட்டை கொடுக்க சமுதாயம் பிரியப்படாமல் போனால் அதற்கான காட்சிகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். மேலும் சினிமா நடிகைகளையோ சினிமாவையோ சார்ந்தல்ல என் வாதம். அதை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதிராகவே ....
மேலும் நீங்கள் கேட்கலாம். ரஜினியோ விஜய்யோ துட்டுக்காக அதை செய்கிறார்கள்.அவர்களை ஏன் நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள் என்று?
சிந்தித்து பாருங்கள் - அப்படி ஒரு காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லி அடம் பிட்க்கும் அளவுக்கு ரஜினிக்கோ விஜய்க்கோ நிச்சயமாக செல்வாக்கு உண்டு. அந்த காட்சியில் நடிக்கும் நடிகையை விட....
---------------------
உங்களுடைய இரண்டாவது ஆதங்கம்.
சமுதாயத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்திற்கு துணை போகும் பெண்களை நான் ஏன் சாடுவதில்லை. எப்போதும் ஏன் ஆண்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது.
விளக்கம்.
உதாரணமாக நம் குடும்பம் ஒரு பண்ணையாருக்கு ஒரு தலைமுறையாக அடிமையாக வாழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். பண்ணையார் வரும் போது நாம் எழுந்து துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரை வணங்கியபடி நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாமும் அடிமை என்பதால் அதை தவறாமல் செய்கிறோம். நம் குழந்தைகளும் அதை கவனிக்கிறது. அந்த பழக்கம் நம் குழந்தைகளுக்கும் வருகிறது. பிறகு ஒரு நாள் நமக்கு அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் நம் பிள்ளைகளை அழைத்து குழந்தைகளே இனி மேல் நாம் பண்ணையாரை வணங்க தேவையில்லை. நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது. இனிமேல் நாம் அடிமைகள் இல்லை. நாம் பண்ணையாருக்கு சமமானவர்கள் ஆகிவிட்டோம். எனவே இனி மேல் அவரை கண்டு நாம் வணங்கவோ மரியாதை செலுத்தவோ பயப்படவோ தேவையில்லை என்று சொல்கிறோம். குழந்தைகள் நிச்சயமாக ஓரிரு மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அதை புரிந்துகொண்டு திருந்திவிடும்.
ஆனால் பண்ணையாரை ஒரு தெய்வத்தின் திருவடிவமாக...பண்ணையாரை கிட்ட தட்ட கடவுளாக உருவகப்படுத்தி பண்ணையார் வரும் பொழுது துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வணங்கியபடி குனிந்து நிற்கவில்லை என்றால் அது தெய்வ குற்றம் என்று போதித்து பாருங்கள். விடுதலை கிடைத்த பிறகும் கூட நம் குழந்தைகள் ஏதாவது தெய்வ குற்றம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பண்ணையாரை வணங்குவதை ஒரு கடமையாக ஏற்கும் வாய்ப்பிருக்கிறது. இதே போன்றொரு வழிமுறையில் தான் ஆணாதிக்கமும் சமுதாயத்தில் காலங்காலமாய் விதைக்கப்பட்டிருக்கிறது.
என்வே ஆணாதிக்கம் எனும் தனி ஒரு இனத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பான்மையானவை மதத்தை முன் நிறுத்தி பிரகடனப்படுத்தப்பட்டது. என்வே காலம் காலமாய் ஆணாதிக்கத்தை தெய்வ வழிபாட்டு முறையாக பாவித்து கடைபிடித்து வருகிறோம். உதாரணமாக பெண் தான் விரும்பும் உடை அணிவது ஜீன்ஸ் அல்லது வேறு உடைகள் அணிவது இழுக்கு கலாசார சீர்கேடு என்றெல்லாம் நாம் வாதிட்டு இருக்கிறோம். பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள். பெண்கள் தாலி கட்டிக்கொண்டு அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடவுள் தண்டிப்பார். இவ்வாறான கோட்பாடுகளின் மூலம் ஆணாதிக்கத்துக்கு ஒரு Religious Identity கொடுத்து வளர்த்துவிட்ட படியால் பெண்களால் அதை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவதில்லை. அதனால் தான் இன்னும் பல பெண்கள் ஆணாதிக்கத்துக்கு பரிந்து பேசி துணை போகும் நிலை உள்ளது. அவர்களை நான் எப்படி கண்டிப்பது. அவர்களை நான் எப்படி சாடுவது. காலம் காலமாய் அடிமையாய் வாழ்வது தெய்வ தரிசனம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் மாற்றத்தை மென்மையாக சொல்லித்தான் உருவாக்க முடியும். எனவே பெண்களை இப்போது உள்ள கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். அணாதிக்கத்தின் வரலாறையும் பெண் அடிமைத்தனத்தின் பண்டைய ஆதார கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.....கேள்விகேட்கப்படவேண்டியவர்கள் அல்ல என்பது உங்களுக்கு புரியும்.
----------------
மேலும் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி இது தான் "வரதட்சணை என்று கூவுகிறாயே அதை ஆதரிக்கும் மாமியார்களை சாடாதது ஏன்?"
உதாரணமாக நீங்கள் ஒரு குதிரை வாங்குகிறீர்கள். பத்தாயிரம் ரூபாய். அதை உங்களுக்கு பராமரிக்க தெரியவில்லை. அதனால் பராமரிப்பு தெரிந்த ஒருவரிடம் அதை ஒப்படைக்கிறீர்கள். அவர் அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஒப்புக்கொள்கிறீர்கள். பிறகு உங்களுடைய மகன் குதிரை பராமரிப்பில் பி.ஹெச்.டி. வாங்கிவிடுகிறான். இப்போது பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய குதிரையை உங்கள் மகனிடம் இலவசமாக பராமரிக்கும்படி சொன்னால் நீங்கள் அதை ஒத்துக்கொள்வீர்களா? உடனே நீங்கள் சொல்ல மாட்டீர்களா? “யோவ் நான் குதிரை வாங்கினப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து பராமரித்தேன். உனக்கு மட்டும் ஓ.சி.யில் பராமரிப்பு கேட்கிறதா?”
அது தான் இன்றைய மாமியார்களின் நிலமை. அவர்கள் ஒரு காலத்தில் வரதட்சணை கொடுக்க வேண்டி வந்தது. அப்படி கொடுத்து திருமணம் செய்துகொண்ட பிறகு இப்போது தன் மகனுக்கு வரதட்சணை இல்லை எனும் போது அவள் சஞ்சலப்படுகிறாள். இதை நான் ஞாயப்படுத்தவில்லை. இருந்தபோதும் இது ஒரு மனித இயல்பு. அப்படியிருக்கும் போது காலம் காலமாய் வரதட்சணை எனும் விலங்கால் பெண்களை பிணைத்து வைத்துவிட்டு இப்போது மாமியார்களை குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை.
ஆனால் ஒரு ஆண் வரதட்சணை எனக்கு அவசியமில்லை என்று உறுதியாக நிற்பானே ஆனால்...ஒரு பெண் நான் அஞ்சு பைசா வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய மாட்டேன் என்று போர் தொடுப்பாளே ஆனால் நிச்சயம் வரதட்சணை ஒழியும். இன்றைய சமுதாயத்தில் வரதட்சணைக்கு ஆசைப்படும் ஆண்கள் குறைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் பெண்களும் அதை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். என்வே நாம் திருத்த வேண்டியது சம கால ஆண்களையும் பெண்களையுமே தவிர மாமியார்களை அல்ல.
சம கால ஆண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை ஐம்பது சதம் திட்டுவேன். சமகால பெண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை இருநூறு சதம் கண்டிப்பேன்.
மேலும் பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டும் என்பதோ...மேற்கத்திய நாகரீகம் பழக வேண்டும் என்பதோ....குடிக்க வேண்டும் என்பதோ....சிகிரெட் புகைக்க வேண்டும் என்பதோ அல்ல என்னுடைய பரிந்துரை. நான் கோருவதெல்லாம் அவள் விரும்புவதை செய்ய அவளுக்கு சுதந்திரம். அவளிடம் ஆணாதிக்கம் சார்ந்த அறிவுரைகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் தோழி வின்சி.
vincyontop@gmail.com