Thursday 16 December 2010

புத்திசாலிப்பெண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது

ஆண் சாவகாசமாக அமர்ந்து தினகரனில் வரும் கற்பழிப்பு செய்தியை மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது பெண் அடுப்பங்கரையில் (அது மாடுலர் கிச்சனாக இருந்தாலும் சரி) கஞ்சி வடித்துக்கொண்டிருப்பாள். ஆண் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டபடி "ஏன்டீ....கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கட்டளையிடுவான். அதென்ன டீ போட்டு கூப்பிடுறது. புருஷன நாம டா போட்டு கூப்பிட்டா ஏதோ அவங்களுக்கு புடவை கட்டி விட்டமாதிரி அவமானப்பட்டுக்குறாங்க. நம்மள மட்டும் நிமிஷத்துக்கு நூறு வாட்டி டீ போட்டு கூப்பிடுறது.


இப்படி பொண்டாட்டிய 'டீ' போட்டு கூப்பிடுற அதிவீர தீர அதி பயங்கர ரணகள கெட்டவார்த்தை பான்பாராக் ஆண் சிங்கங்கள் தான் சன் மியூசிக்கில் வரும் பதினெட்டு வயது பெண்ணை 'மேடேம்....மேடேம்..."என்று மேய்கிறார்கள். ஆக அவர்களுக்கு பெண்களை மேடம் என்று அழைப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை மனைவியிடம் காட்டிவிட்டால் ஈகோ போய்விடும் அல்லவா. காலம் காலமாக என்ன சொல்லிக்கொடுத்தார்கள்? மனைவியை 'டீ' போட்டு அழைப்பது தான் ஆண்மைத்தனம். நல்ல கூப்பிடுங்கப்பா. பெண்களே உங்களுக்கும் சூடு சொரணை இல்லை. அவன் டீ போட்டு கூப்பிட்டா 'என்னங்க' என்று கே.ஆர்.விஜயா மாதிரி போய் நில்லுங்க.

பெண்கள் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆண் தன்னை பலசாலி எனவும் அதிவீர பான்பாராக் பாண்டிகளாகவும் பாக்கு போட்டு படிக்கட்டு முக்கில் துப்பி வைப்பது ஆண் வர்க்கத்தின் அதிபயங்கர போர்வீரனின் நெஞ்சுரம் போலவும் பீற்றிக்கொள்ளும் ஆண் கேவலம் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் ஏன் பெண்ணை பணிக்கவேண்டும். அந்த சொற்ப வேலைகளை கூடவா அவர்களால் செய்ய முடியாது. புட்போர்டில் தொங்கியபடி சாகசம் காட்டும் ஆண்கள் அந்த சக்தியில் ஒரு பகுதியை செலவிட்டாலே பெண்களை உள்ளாடை வரை துவைத்து போட்டுவிடலாமே பிறகு ஏன் வீட்டு கழுவ பெருக்க என்று வீட்டு வேலைகளை எப்போதும் பெண்ணே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

இன்று ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் கூட பெண் தான் வீட்டு வேலை செய்ய பணிக்கப்படுகிறாள். கஞ்சி வடிப்பதும் கக்கூஸ் கழுவுவதும் பெண்களின் பிறப்புரிமை போல ஆணுக்கு நிகராக சம்பாதித்தாலும் இந்த கன்ட்ராவிகளை எல்லாம் நாமே செய்யவேண்டியிருக்கிறது.

பழங்காலத்தில் ஆண் வெளியில் போய் சம்பாதித்துவிட்டு வருவான். (அப்போது பெண்களாகிய நம்மை எங்கே அவர்களை விட நிறைய சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சி வேலைக்கே அனுப்பவில்லை.) அது வேறு கதை. அப்படி சம்பாதித்த காலத்தில் இரவில் ஆண்கள் தங்களை ஓசியில் குஷிபடுத்திக்கொள்ள தாலி என்ற புனித வஸ்துவை கட்டி மாட்டை போல் பெண்களை கூட்டி வைத்துக்கொண்டார்கள்.

ஒருவனை அடிமையாக வைத்துக்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா அந்த அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவது தான்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளி. அங்கே ஒரு ஆசிரியை பயங்கர கோபக்காரி. எதற்கெடுத்தாலும் எங்களை அடித்துவிடுவார். அதுவும் அவரது ஸ்டைல் எப்படிஎன்றால் மண்டி போட்டு நிற்க வைத்து புட்டத்தில் பிரம்பால் அடிப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் அவரிடத்தில் அடி வாங்கியிருக்கிறோம். வகுப்பில் பேசினால் போதும் எழுந்து வந்து கன்னத்தை பளாரிவிடுவார்.

ஒரு முறை இப்படி பிரம்பால் அடித்து ஒரு பையனுக்கு புட்டம் வீங்கிவிட்டது. அவன் அதை வீட்டில் சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன சொன்னார்கள் தெரியுமா "ஆசிரியர் அடித்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் நீ நல்வழிப்படத்தான் அடிக்கிறார்கள். குருவின் தண்டனையை எதிர்த்து கேள்வி கேட்டவன் எவனும் உருப்பட்டதில்லை" என்று அறிவுரை வேறு கூறி அனுப்பிவிட்டார்கள்.

காலப்போக்கில் நாங்களும் அந்த ஆசிரியரின் வக்கிரங்களை குரு, சிஷ்யர்களுக்கு அளிக்கும் புனிதப்பரிசாக நினைக்க ஆரம்பித்தோம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர் கையால் அடி வாங்குவது ஏதோ வரம் கிடைத்தது போல உருவகப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அடி வாங்கியபடியே இருந்தோம். ஒரு நாள் வகுப்பில் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆசிரியை பார்த்துவிட்டாள். கையில் வைத்திருந்த கட்டை டஸ்டரை எடுத்து அந்த பெண் மீது வீசினாள். அது அவளின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. அந்த பெணுக்கு சட்டென்று பெருங்கோபம் வந்தது. எப்படித்தான் அப்படி கோபப்பட்டாளோ தெரியாது. குனிந்து டஸ்டரை எடுத்து அந்த ஆசிரியை மீது ஓங்கி அடித்தாள். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த ஆசிரியை எங்கள் யாரையும் அடிப்பதில்லை. இது தான் புரட்சி. நம் அடிமைத்தனத்தை நாமே புனிதப்படுத்தி மண் சோறு தின்று தாலிக்கு மஞ்சள் குங்குமம் தடவி என்னங்க ஏதுங்க என்று ஒரு விலைக்கு வாங்கப்பட்ட அடிமை நாயை போல புனித யாத்திரை மேற்கொண்டால் ஆண்கள் இப்படித்தான் தொடர்ந்து நம்மை வதைத்துக்கொண்டிருப்பார்கள்.

ஆண்கள் பலே கில்லாடிகள் பாருங்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் திருட்டு ரகசியம் நமக்கு தெரிந்துவிடும் என்பதால் உடனே அதை புனிதப்படுத்திவிடுகிறார்கள். உதாரணமாக தாலி. தாலியை ஒரு புனித சம்பிரதாயமாக நம் மீது திணிக்கிறார்கள். இன்று சில குடும்பங்களில் பறவாயில்லை முன்பெல்லாம் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற உரிமை இருந்ததா?

அதாவது இரவில் ஆணை குஷி படுத்துவதும் பிறகு மசக்கை வாந்தி மயிரு என்று படாதபாடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதும் பிறகு அதை வளர்ப்பதும் அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆணை இரவில் குஷி படுத்துவதும் அடுத்த குழந்தையை சுமந்து வாந்தி எடுத்து சாப்பிடபிடிக்காமல் பசித்து துடித்து மீண்டும் மீண்டும் அதே துன்பத்தை வருடாவருடம் நம்மிடம் திணித்தார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு பார்த்தால் எல்லார் வீட்டிலும் ஐந்தோ பத்தோ குழந்தைகள் இருக்கும். எந்த பெண்ணுக்காவது இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றோ இன்றைக்கு என்னை தொடாதே என்றோ சொல்ல உரிமை இருந்ததா? இல்லை. ஏனென்றால் தாய்மை என்பதையே ஏதோ புனித புண்ணாக்காக மாற்றி அதை காட்டியே பெண்ணை அடிமையாக வைக்க நினைத்த மகா கில்லாடிகள் நம் ஆண்கள்.

அதாவது தாய்க்குபின் தாரம் என்று ஏதோ கவர்னர் பதவியை நமக்கு கொடுத்துவிட்டது போல் இந்த ஆண்கள் நம்மை படுத்தியபாடு தெரியாதா என்ன?

விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை துணி கட்டி அழகு பார்த்த அரும்பெரும் புலிகள் அல்லவா இந்த ஆண் சமூகம்.



யோசித்து பார்த்தால் இப்படி பெண்ணை அடிமைபடுத்தும் எல்லா விஷயங்களையும் புனிதப்படுத்தியோ கடவுளோடு தொடர்புபடுத்தியோ அல்லது தியாகம் அன்பு என்று உருவகப்படுத்தியோ சமூகம் நம் மீது மறுபடியும் மறுபடியும் திணிக்கிறது. குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளவேண்டுமாம். ஓத்துவிட்டு போன ஆணுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதென்று கேட்டு பாருங்கள். தாய் தெய்வீகம் புனிதம் என்று வந்துவிடுவார்கள்.

இப்படித்தான் வீட்டு வேலை செய்வதையும் பெண்கள் மீது திணித்துவிட்டார்கள். மார்கழி மாதம் எந்த வீட்டிலாவது ஒரு ஆண் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடியுமா?



ஏன் என்று சொல்லுங்கள்? கேவலம் வாசலில் கொஞ்சூண்டு தண்ணி தெளித்து உக்காந்து தெமாத்தூண்டுக்கு ஒரு படம் வரைய முடியாத அளவுக்கு ஆண்கள் எல்லாம் பலகீனமாக உடல் ஊனமாகவா போய்விட்டார்கள்.

அல்லது ஓவியம் வரைவது ஆண்களுக்கு தீட்டு என்று எழுதியிருக்கிறதா? ஒரு வீட்டிலும் அப்படி பார்க்க முடியாது. காரணம் அதெல்லாம் பெண்களின் குல தொழில்.

தாய்க்கு பின் தாரம் அல்லவா ஆண்களே.

தொடரும்...