Wednesday 20 January 2010

பெண் பார்க்கும் படலம் என்னும் ஆணாதிக்க வக்கிரம்.

ஒரு கடிதம்


தோழி வின்சி அவர்களுக்கு வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். உங்களின் எண்ணங்கள் அனைத்துடனும் நான் ஒத்து போகிறேன். உங்கள் கருத்துக்கள் சில இடங்களில் வீரியமாக சொல்லப்பட்டாலும் அத்தனையும் முகத்தில் அறையும் உண்மைகள்.
பெண்கள் தொடர்ந்து பல வழிகளில் கலாசாரம் மதம் என்ற போர்வையில் பல வன்மையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் வக்கிரம் என்னவென்றால் சிறு வயதிலிருந்தே அந்த கொடுமைகளை எல்லாம் ஏதோ தனக்கு வந்து சேரும் பெருமைகளை போல் ஒரு பெண் பாவித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறாள். உதாரணமாக பெண் பார்க்கும் படலம். ஒரு பெண்ணை விற்பனை பொருளாக பாவிக்கும் ஒரு சடங்கு தான் பெண் பார்க்கும் படலம் என்பது என் கருத்து. மேலும் இதை பெண் ஆனவள் தன் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக அதை கருத நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இது எத்தனை வக்கிர குணம் கொண்ட ஒருவனால் வடிவமைக்க பட்டிருக்கும் சடங்கு என்று நினைக்கிற போது மனம் வேதனை அடைகிறது. இதை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மேலும் எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற கீழ்த்தரமான நிகழ்வு நடந்தேறவில்லை. நான் உண்மையில் மாப்பிள்ளை பார்க்க போனேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். அதை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறும்

தோழி
சித்ரா.
-------

பெண் பார்க்கும் சடங்கு என்று ஒரு சாபக்கேடு நம் சமுதாயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண் அழகாக புடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு பூ வைத்துக்கொண்டு தயாராய் இருக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பெண் அவர்கள் முன்னால் நடந்து வந்து அமரவேண்டும். பெண் ஊனமாக இருக்கிறாளா என்பதன் சோதனை முயற்சி. பிறகு தலை குனிந்து வெட்கப்பட்டபடி அவள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு காபி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் கொடுக்க வேண்டும்(கிட்ட தட்ட வேலைக்காரி போல்). அவர்கள் அந்த காபி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்பார்கள். அடுத்து சில குடும்பங்களில் பெண் மண்டி போட்டு பெரியவர்களை வண்ணங்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணை பாட சொல்வார்களாம். அதாவது பெண் ஊமையா என்ற பரிசோதனை. இது எல்லாம் நடந்தேறிய பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள். போய் கடிதமோ தொலை பேசியிலோ வியாபாரம் பேசுவார்கள். பிறகு திருமணம். இது போன்ற ஒரு நிகழ்வை வேசிகளின் கூடாரத்தில் தான் நாம் பார்க்க முடியும்.

விபசாரம் என்ற சாபக்கேடு உள்ள இடங்களில் வேசிகளின் கூடாரத்தில் தான் பெண் அலங்கரிக்கப்பட்டு ஆண்கள் முன்னால் நிறுத்தப்படுவாள். ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். பெண்கள் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் போல் விற்பனைக்கு தயாராய் நிற்பார்கள். அதன் மறு பிரதியே பெண் பார்க்கும் படலம். பெண் என்ன விற்பனை பொருளா. துடைத்து மெருகேற்றி பலருக்கு கண்காட்சிக்கு வைத்து அதில் ஒருவர் அவளை வாங்கிக்கொண்டு போக.

நற்குடி பெண்கள் பர்தா அணிவார்கள் என்ற கீழ்குடி சிந்தனை நிறைந்திருக்கும் நம்மிடம் பெண்களை முன்னுக்கு கொண்டு வருவது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் பலமுறை இந்த தளத்தில் குறிப்பிடுவது போல் நற்குடி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முற்றிலும் துறக்க வேண்டும். நமக்கு வீட்டுவேலை செய்வதை விட நிறைய வேலைகள் இருக்கிறது என்று உணரவேண்டும். நற்குடி பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி வேலை வாய்ப்பு என தன் உடல் அழகை பேணி முன்னேற வேண்டுமே தவிர வீட்டு வேலைகள் செய்வதல்ல அவளது கர்ம விதி.

இப்போது ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் போல் வீட்டு வேலைகளை 50-50 என பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது பெருந்தன்மை அல்ல. காலத்தின் கட்டாயம். பல நூற்றாண்டுகளாய் பெண்கள் அடுப்பூத மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஏன் ஆண்கள் அடுப்பூதக்கூடாது என்பது தான் என் கேள்வி. 50-50 என்பதெல்லாம் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கண்டு இதற்கு மேலும் அவர்களால் தங்கள் போலி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்பதால் தங்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் 50-50. இதில் ஏமாந்து போக வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதெல்லாம் நாம் ஆண்களை விட முன்னேறி விடக்கூடாதென்பதற்காய் போடப்படும் கட்டு வேலை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நான் எப்போதும் சொல்வது போல் ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து. பெண் ஆணை விட உயர்வானவள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டுமோ அதே போல் பெண் என்பவள் பெண் பார்க்கும் சடங்கு என்ன்னும் வேசித்தனமான வியாபார விளையாட்டையும் வலிமையாக எதிர்க்க வேண்டும். பெண்களே நினைத்து பாருங்கள் நாம் என்ன விற்பனை பொருளா. அல்லது ஒருவனுக்கு மட்டுமே விற்கப்படும் வேசியா. எதற்காக நாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இன்று ஆண்களை புறந்தள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நாம் ஏன் நம்மை ஒரு விற்பனை பொருள் போல் அலங்கரித்துக்கொண்டு ஈ என பல் இளித்தபடி ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும்.



என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப நெர்வஸா இருக்கீங்க. எனக்கு உங்கள பிடிக்குமோ இல்லையோன்னு பயப்படுறீங்களா? ரிலாக்ஸ். வீட்டுக்கு போய் லெட்டர் போடுறோம்.





பெண் பார்க்கும் படலம் என்பது ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. நம் உடல் பரிசுத்தமானது. அதை நம் அனுமதியின்றி யாரும் தொடவோ தீண்டவோ அனுமதிக்க கூடாது. என்வே பெண்கள் எல்லாம் ஒருமித்த வலிமையோடு பெண் பார்க்கும் படலம் என்ற ஆணாதிக்க சடங்கை முற்றிலும் எதிர்க்க வேண்டும். துறக்க வேண்டும். ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் உயர்வானவர்கள். ஆண்களை விட. இந்த பூமியில் எல்லா உயிருனங்களை விடவும் நாம் மேன்மை பெற்றவர்கள். நம் உடல் அழகை மெருகேற்றி அதை வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டி நம்மை ஏற்றுக்கொள்ளும் படி கெஞ்சும் வலுவிழந்த நிலையில் நாம் இல்லை என்பதை உணரவேண்டும். ஏன் பெண் பார்க்கும் சடங்கு என்பது மாப்பிள்ளை பார்க்கும் சடங்காக இருக்க கூடாது என்று கேளுங்கள்.
என்னுடைய நெருங்கி தோழி ஒருவருக்கு பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. எப்படி என்றால் கோயிலில் வந்து பெண்ணை பார்ப்பார்களாம். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வீட்டில் வந்து பேசுவார்களாம். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த பெண் அழகாய் அலங்காரம் பண்ணியிருந்தாள். அவளின் பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அவளோடு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு காரில் வந்தான். அவ்னோடு வனுடைய அப்பாவும் ஒரு நண்பனும் வந்தார்கள். இரண்டே நிமிடம் நின்றுவிட்டு போய்விடார்கள். அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். அந்த இரண்டு நிமிட காட்சிக்கு இவள் ஒரு நாள் முழுக்க சிரமம் எடுத்து தன்னை அலங்காரப்படுத்தியிருந்தாள். அவன் கார் எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். பதில் இல்லை. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இத்தனைக்கும் அந்த பெண் மாப்பிள்ளையை விட அதிகம் படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். அவனை விட அழகு. அதை பார்க்கவே எனக்கு பரிதாபமாய் இருந்தது. இது தான் இன்று பெண்களின் நிலை. அந்த பெண்ணும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள தயார்படுத்தப்படுகிறாள். ஏன் இந்த அவல நிலை. நாம் என்ன அவ்வளவு கீழ்த்டரமாய் போய்விட்டோமா சிந்தியுங்கள் பெண்களே.


சித்ராவின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் விபரமான மடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் தோழி
வின்சி.

vincyontop@gmail.com